Friday, 20 July 2012

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சே யின் வாக்குமுலம்

This is an excerpt from the court report of Godse translated in Tamil-"why i killed Gandhi";Here its for your reading...
*****************************************************************************
காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு.
வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே
 கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில்
 கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி
வருமாறு:-
ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி,
அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம்
 தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர்
கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.
தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள்
 ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப்
 போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து
துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம்
 ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான்
வருகிறது.
காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன்.
 சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா
 விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை
 "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல்
 காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள
நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின்
 கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம்
அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த
விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும்
 என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை.
 எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.
பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா
 காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான்
வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை.
நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான்
 பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு
வரட்டும்.
நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும்
 காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான
 கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை
 ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ்
 சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ்
 தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ்
 அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு
வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட
நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு
 சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள்
 ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின்
அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.
முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார்.
 பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள்
 மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
 மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம்
 மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில்
 எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர
 நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான்
கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
 பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும்
 இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை
 எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும்.
ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள்
 படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.
15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான
பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல
விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
 இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய
அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய
நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு
 விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.
 "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால்
அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு
 (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு
 நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை
அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான்
 பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம்
கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள்
 எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத்
தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி?
 பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி
மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல்
பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப்
 பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது.
முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை
பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த
கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.
சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும்
எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து
 கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என்
உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய
 நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம்.
 என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.
பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை.
`கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு
இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள்
 யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை
என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும்
 செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன்
என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என்
அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.
1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு
 திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும்
 மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன்
 என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின்
நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும்
 இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.
நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா
 மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும்
 இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில்
 உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள
 உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு
 இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்.
****************************************************************************

1 comment:

  1. Pls revive history carefully its not only Gandhi fought for freedom, strenuous,massive and stringent efforts were taken by Nethaji to kick off the aliens.

    ReplyDelete